Monday, October 26, 2015

தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள்

மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களை வெளியிட்டு, ஏழை மாணவர்களை குறிவைத்து, தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன. நான்கு வாரத்திற்குள் இவற்றை இழுத்து மூட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு, ஆறு மாதமாக மவுனமாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள், பள்ளிகள் அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவும் செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.
அங்கீகாரம்ஆனால், நர்சிங் கவுன்சில் அனுமதி பெறாமல், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், 'பாரத் சேவாக் சமாஜ்' அங்கீகாரம் பெற்றதாகவும், போலி விளம்பரங்களுடன், தமிழகத்தில், 1,800 நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருவது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், நர்சிங் உதவியாளர், கிராம செவிலியர், சுகாதார உதவியாளர் என, வெவ்வேறு பெயர்களில், 12 விதமான, மூன்று மாதம் முதல், இரண்டு ஆண்டுகள் வரையிலான படிப்புகள் நடத்தப்படுகின்றன. விவரம் தெரியாத ஏழை மாணவர்கள், 'குறைந்த கட்டணம்; பயிற்சியின் போதே சம்பளம்...' என்ற, போலி விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றனர். படிப்பை முடிந்து, சான்றிதழை பதிவு செய்ய, நர்சிங் கவுன்சில் சென்றால், 'அனுமதி இல்லாத இடத்தில் படித்துள்ளீர்கள்; பதிவு செய்ய முடியாது' என, திருப்பி அனுப்பும்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிகிறது.
இவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில் கூட வேலை கிடைக்காது.இத்தகைய, 'டுபாக்கூர்' மையங்களை தடுக்க, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி இன்றி, பாரத் சேவாக் சமாஜ் உள்ளிட்ட, பல பெயர்களில் இயங்கும் பயிற்சி மையங்கள் மீது, நான்கு வாரங்களுக்குள், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்து, ஆறு மாதமாகியும், இதுவரை, 'டுபாக்கூர்' மையங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏமாற்றம்:
இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனுமதியில்லாத பள்ளிகள் குறித்து, அரசுக்கு அறிக்கை தந்து உள்ளோம். அரசின் அனுமதி கிடைத்ததும், விரைவில், 'டுபாக்கூர்' மையங்கள் மீதுநடவடிக்கைஎடுக்கப்படும்' என்றார்.நர்சிங் கல்லுாரிகள், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவு முடிந்துள்ள நிலையில், இடம் கிடைக்காத மாணவர்கள் விவரம் தெரியாமல், இதுபோன்ற, 'டுபாக்கூர்' பள்ளிகளில் சேர்ந்து, ஏமாற வாய்ப்புள்ளது.கர்நாடகாவில், இதுபோன்று செயல்பட்ட, 'டுபாக்கூர்' பயிற்சி பள்ளிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோர்ட் அனுமதி பெற்று, அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. தமிழக அரசு, இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, அப்பாவி ஏழை மாணவ, மாணவியர், இந்த கும்பலிடம் சிக்கி தவிக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஏழை மாணவ, மாணவியரை ஏமாற்றும், 'டுபாக்கூர்' நர்சிங் நிறுவனங்களை மூட, அரசு தயக்கம் காட்டக்கூடாது. தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், மாவட்ட நிர்வாக உதவியுடன் இதை செய்யலாம்.
நன்றி தினமலர் நாளிதழ் 25,10,2015  http://www.dinamalar.com/news_detail.asp?id=1371352

No comments:

Post a Comment