Sunday, July 25, 2010

தெரியவில்லை வங்கியின் எல்லை பார்வைக்கு வைத்தால் பயன்

கூடலூர் : "நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தங்களின் எல்லைப் பகுதியை, வங்கிகளில் ஒட்டி வைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல வங்கிகளில், மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து, வசிப்பிடம், வாடிக்கையாளர் சேவைக்கு உட்பட்ட பகுதியில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் தங்களுடைய சேவைப் பரப்பு வரையறுக்கப்பட்டது; இப்பகுதிகளில், சேமிப்பு கணக்கு, கடன் வழங்குதல், வைப்பு, முதலீடு பெறுதல் உட்பட சேவைகளை வழங்குகிறது. வங்கியின் சேவைப் பகுதிகள் குறித்தும், எந்த வங்கியில் கடன் பெறுவது என்பது குறித்தும் மக்களுக்கு தெரிவதில்லை. பிரச்னைக்கு தீர்வு காண, சேவை வழங்கும் பகுதி விபரங்களை, வாடிக்கையாளர்கள் அறிந்துக் கொள்ள, வங்கிகளில் ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

"பயம்' இருந்தால் "ஜெயம்' இருக்காது நிலவும் நிலையை மாற்ற அறிவுரை

ஊட்டி: "அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும்' என, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம்,  ஊட்டியில் நடத்தப்பட்டது. மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடு குறித்து பேசினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நுகர்வோர் அமைப்புகள் தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும். பல நிலைகளில், தனக்கு என்ற செயல்பாட்டை தவிர்த்து மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மையங்கள், மன்றங்கள், மக்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி வைக்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை மக்கள் அறிய உதவ வேண்டும். மக்களின் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மக்களுக்கு உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். குறைகளுக்கு புகார் அனுப்புவதோடு இருந்து விடாமல், தொடர் கண்காணிக்க வேண்டும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தயார்படுத்த வேண்டும்; மக்கள், தட்டிக் கேட்பவர்களாக மாற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் பேசுகையில், "மக்கள் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கொண்டுள்ளனர்; அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும். மக்களை விழிப்படைய செய்வதுடன், அடிப்படை தேவைகள் பெற உதவ வேண்டும். ரேஷன் கார்டு பெற்றுத் தருதல், முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருதல் உட்பட அரசு நலத்திட்டங்களை பெற உதவுவது அல்லது அவைகளை பெற வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளும் நலத்திட்டங்கள், செயல்பாடுகளில் நிலவும் குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; முறைகேடுகளை களைய மேலதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை சேகரித்து, விவாதிக்க வேண்டும். உள்ளூர் குறைபாடுகளை மக்கள் மூலமாக தீர்க்க வலியுறுத்த வேண்டும்.நீர் வளம், சுகாதார சீர்கேடு, கழிவு நீர் அகற்றுதல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களில், உள்ளாட்சி செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். புகார் அளிக்கும் முன், ஆதாரங்களை திரட்ட வேண்டும். மக்கள் நலனுக்கு செயல்படும் அமைப்பாக உருவாக வேண்டும். இவ்வாறு, வீரபாண்டியன் பேசினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்து, அமைப்புகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ், ரமேஷ், ஜெயச்சந்திரன், சுப்ரமணி, மஞ்சுளா, ராமச்சந்திரன், டேவிட், கவிதா, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். கிராம நுகர்வோர் மன்ற அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

"தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' 30ம் தேதி கோவையில் விழிப்புணர்வு

ஊட்டி : "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில், கோவையில் வரும் 30ம் தேதி, விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய - மக்கள் மைய தலைவர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:தரமான பொருட்களை விற்பனை செய்ய, தரமான பொருட்கள் குறித்து அறிந்துக் கொள்ள, மத்திய அரசு, இந்திய தரக் கட்டுப்பாட்டு மையத்தை (பி.ஐ.எஸ்.,) செயல்படுத்தி வருகிறது. தரமான பொருட்களை கண்டறிதல் மற்றும் தர முத்திரைகள், தர நிர்ணய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய தர கட்டுப்பாட்டு அமைவனம், கோவை கருமத்தம்பட்டி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் சார்பில், கோவையில் வரும் 30ம் தேதி தர விழிப்புணர்வு குறித்த, "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சியை நடத்துகிறது.தர நிர்ணய சட்டங்கள், தர முத்திரைகள், தர முத்திரை குத்தப்பட்ட பொருட்களில் வேலை குறைபாடு நிவர்த்தி செய்தல், புகார் தெரிவித்தல், நிவாரணம் பெறல், போலி தர முத்திரைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், "கூடலூர் பாதுகாப்பு, மக்கள் மையத்தை அணுகலாம்; 94885-20800 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தர முத்திரைகள், போலி பொருட்கள் குறித்த புகார் இருப்பினும் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்

மாணவர்களின் போக்குவரத்து பிரச்னை நுகர்வோர் பாதுகாப்பு மையம் யோசனை

ஊட்டி: "மாணவர்களுக்கான போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம், வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டு, கிராமப் பகுதிகளுக்கான பஸ்கள், நகரப் பகுதிகளுக்கு மாற்றி இயக்கப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில பஸ்களின் நடத்துனர்கள், பள்ளி , கல்லூரி மாணவ, மாணவியரை ஏற்றி செல்ல மறுக்கின்றனர். மாணவர்களை ஏற்றிச் செல்ல, போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். பஸ்சில் பயணிக்கும் முறை குறித்து, பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர், வரிசையில் நின்று பஸ்களில் ஏறி பயணிக்கின்றனர். இம்முறையை, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும். இதை கண்காணிக்கவும், மாணவர்களை ஏற்றிச் செல்லாத பஸ்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், பள்ளி மாணவர்களிடையே ஒரு குழுவை ஏற்படுத்தினால் பயன் கிடைக்கும். தனிக்குழுவாக இல்லாவிட்டாலும் என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., மாணவர் படை, குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் இப்பணியை மேற்கொள்ளலாம். பள்ளி நிர்வாகங்கள் ஆதரவு தெரிவித்தால்,


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம் ஆதரவு தரும். பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, போக்குவரத்து, போலீசார், கல்வித் துறையினர் ஒன்றிணைந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

Sunday, July 11, 2010

நுகர்வோர் விழிப்புணர்வு 10.07.10

பந்தலூர் நுகர்வோர் விழிப்புணர்வு
நிகழ்ச்சி நடத்திய படங்கள்

நாள் : 10.07.10