உதகையில் இன்று சர்வதேச மலை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மலைகள், மலைத்தொடர்களை சிறப்பிக்கும் வகையில், கடந்த 2003ம் ஆண்டு யுனாஸ்கோ, டிசம்பர் 11ம் தேதியை பன்னாட்டு மலை தினமாக அறிவித்தது.
2004 முதல் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பிரதேசங்களில், மலைகளின் முக்கியத்துவம், மலைகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதுகாப்புகள், அவற்றின் முக்கியத்துவம், மலை வாழ் மக்களின் பாரம்பரியம் போன்றவற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் இதுவரை, மலை அரசியாக திகழும்,நீலகிரி மாவட்டத்தில் பன்னாட்டு மலை தினம் கொண்டாடப்படவில்லை.
இந்நிலையில், முதன் முறையாக, உதகை அருகே முத்தோரை பாலாடா பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், இம்முறை பன்னாட்டு மலை தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியுதவியுடன் பன்னாட்டு மலை தினம், உலக மலை தினம் என்ற பெயரில் இன்று கொண்டாடப்படுகிறது.
நாம் மலைகள் மற்றும் சிகரங்களை சுற்றுலா ஸ்தலமாக பார்க்கும் நிலையில், நீலகிரி பழங்குடிகள், அவற்றை தங்கள் மூதாதையர்கள் வாழ்விடங்களாகவும், வழிப்பாட்டு ஸ்தலங்களாகவும் வணங்கி வருகின்றனர். நீலகிரியில் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு இயற்கையோடு ஒன்றி, மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக தோடர் இன பழங்குடி மக்கள் மல்லேஸ்வரர் முடி மலையையும், இருளர் இன மக்கள் ரங்கசாமி முகடு மலையை புனிதமான மலையாக போற்றி வருகின்றனர்.
கோத்தரின மக்கள் கேத்தரீன் நீர்வீழ்ச்சி மற்றும் மலையை வணங்கி வருகின்றனர் என்கிறார் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் மகேஷ்வரன்.
அவர் மேலும் கூறியதாவது: ‘நீல மலையும் அதன் பூர்வகுடிகளும்’ என்ற தலைப்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலை, மல்லேஸ்வரன் முடி மலை உள்ளிட்ட 8 சிறந்த மலைகளின் புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த புகைப்படங்கள், அணிகலன்கள், வாழ்க்கை முறைகள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. ‘ஜொகை மனை’ என்ற மலை தினம் தொடர்பான நூல் ஒன்றும் வெளியிடப்படுகிறது என்கிறார் மகேஷ்வரன்.
No comments:
Post a Comment