ஊட்டி:"பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உப்பு மற்றும் அமில தன்மை வாய்ந்ததாக உள்ளதால், சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நெஸ்ட் அறக்கட்டளை சார்பில், கோத்தகிரி பாண்டியராஜன் மெட்ரிக் பள்ளியில், ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தாளாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். நீலகிரி கலாசார சுற்றுச்சூழல் சேவை அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""பண்டைய காலத்தில் ரசாயனமில்லாத விவசாயத்தின் மூலம் கிடைத்த உணவுகளை உண்டு வந்தனர்.
தற்போதைய பல உணவு வகைகள், இயற்கைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் உணவாக உள்ளன."டின் புட்ஸ்', பாதுகாக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உப்பு, அமில தன்மை உடைய உணவுகளாக மாறிவிடுகின்றன. இதனால், உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, சிறு வயதில் இருந்தே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.இவற்றை தவிர்த்து பாரம்பரிய உணவுகளான ராகி, கம்பு, தினை, கோதுமை, நெல் போன்ற உணவுகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,""விளம்பரங்களை பார்த்து நமது உணவுகளை தேர்வு செய்கிறோம். இவற்றால் உடலுக்கு எந்த பயனும் இல்லை. இதில் நிறம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்குகிறது. இதில் உள்ள பாதிப்புகளை பற்றி அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் பேசுகையில், "" குழந்தைகள், இளைஞர்கள் சிப்ஸ், கார வகைகள், ஐஸ்கிரீம் போன்றவை தவிர்க்க வேண்டும்; வீடுகளில் தரமான உணவை தயாரித்து, உண்ண பழக்கப்படுத்தி கொள்ளுதல் அவசியம்,'' என்றார். நிகழ்ச்சியில், திரளான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment