Tuesday, December 10, 2013

"எதிர்கால சந்ததிகளுக்காக இயற்கையை காக்கும் நடவடிக்கை அவசியம்'

ஊட்டி : "நமது எதிர்கால சந்ததிகளின் நன்மையை கருதி, இயற்கையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழு ஆகியவை சார்பில், சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில், இயற்கையை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை லதா தலைமை வகித்தார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டத்தில் மக்கள், இயற்கையின் கொடைகளை உணராமல், இயற்கையை சிதைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
நமது எதிர்கால சந்ததிகளின் நன்மையை கருதி, இயற்கையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழு நிர்வாகி சேகர் பேசுகையில்,""சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது மனிதகுலம் கடமைகளில் ஒன்றாகும். இதனை காக்க நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்,'' என்றார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழு நிர்வாகி பூபதி பேசுகையில், ""பொது இடங்களில் குப்பைகளைச் சேர விடாமல் இருக்க வேண்டும்; தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்கவிடுதல், கழிவுநீர் தேங்குமிடங்களில் அடைப்புகள் ஏற்படுத்துதல், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்,'' என்றார். இதேபோல, ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் புஷ்பா தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குணசீலி முன்னிலை வகித்தார்.

No comments:

Post a Comment