Wednesday, April 10, 2013

பள்ளி, கல்லூரி நுகர்வோர் மன்றத்துக்கு நிதி வழங்க கோரிக்கை


பள்ளி, கல்லூரி நுகர்வோர் மன்றத்துக்கு நிதி வழங்க கோரிக்கை
ஊட்டி, ஏப். 8:
போதுமான நிதி வழங்கப்படாத நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இயங்கும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் செயல்படாமல் போகும் அவல நிலை நீடிப்பதாகவும், உடனடியாக நிதி ஒதுக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் பல்வேறு அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டு நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே நுகர்வோர் கல்வி அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர இன்னும் பல பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கி சிறப்புடன் செயல்படுத்த விரும்புகின்றன.ஆனால், பல பள்ளிகளில் தங்களின் சொந்த முயற்சியினால் கடந்த 5 ஆண்டுகளாக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கியும் அவர்களுக்கு இதுவரை நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பள்ளிகளின் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகள் கேள்வி குறியாக உள்ளது.
நுகர்வோர் கல்வி மக்களிடையே அதிகரிக்க பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பெருமளவு உதவியுள்ளது. இது தொடர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். தற்போது இம்மன்றங்களில் உள்ள மாணவர்களுக்கு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் கூட வழங்க முடியாத நிலையில் சில பள்ளிகள் உள்ளன. இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பெயரளவு மட்டுமே உள்ளது. பள்ளிகளில் செயல்படும் இதர சார்பு அமைப்புக்களான என்எஸ்எஸ்., என்சிசி., தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சுலுவை சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு உரிய காலத்திற்குள் நிதி வழங்கப்படுகிறது. இதனால் இவைகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன. ஆனால் நுகர்வோர் மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி கடந்த 3 ஆண்டுகளாக வந்து சேரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுமக்களிடையே போய் சேருவது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. தொடர்ந்து நிதி வழங்கப்படாதபட்சத்தில் அடிப்படை செயல்பாடுகள் கூட இல்லாமல் நுகர்வோர் மன்றங்கள் முடங்கிவிடும். எனவே இதுநாள் வரை சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு அரசு உடனடியாக நிதி வழங்கி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment