Wednesday, January 30, 2013

இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்

alt

இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்

இயற்கை மற்றும் விலங்குகள்

  • ஊட்டி :ஊட்டி மரவியல் பூங்காவில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், உலக சதுப்பு நில பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊட்டி சி.எஸ்.ஐ., ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்.ஐ., மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று இயற்கை காப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா பேசுகையில், ""உலகம் முழுவதும் பிப்., 2ம் தேதி உலக சதுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • தற்போதைய சூழலில் பல்வேறு சதுப்பு நிலங்கள் நிலை மாற்றப்பட்டுள்ளன. இவைகளினால் காற்று, நீர், ஒளி மாசு ஏற்பட்டு பல நிலைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும், இயற்கை வாழ் நீர் வாழ்வினங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களும் பெரிதும் பாதிக்கின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல ஆடம்பர பொருட்கள் இயற்கையை பாதிப்படைய செய்வதுடன் சிறிய உயிரினங்களின் வாழ்வையும் சிதைக்கின்றன.

  • வனத்தீயினால் நீலகிரியில் மிக முக்கிய வன உயிரின மண்டலமான முதுமலை தேசிய பூங்காவான முக்கூர்த்தி போன்ற இயற்கை பாதுகாப்பு பகுதிகள் சேதமடைகின்றன. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் இயற்கையை பாதிக்காத பொருட்களாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தும் சோப்பு முதல் எழுது பொருட்கள் மற்றும் இதர உபயோக பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் நம்பக பொருட்களாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை நமக்கு நல்ல நீர், காற்று, நல்ல சூழலையும், பலவித நன்மைகளையும் தருகிறது. நாமும் இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் இயற்கை நேசிக்கும் குடும்பமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.

  • சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ""சதுப்பு நிலங்கள் சோலைக்காடுகள், மலைகளை ஒட்டிய நீர்வளங்கள் அடங்கிய பகுதியாகும். இவை பல வகையில் நமக்கு பயன் தருகின்றன. சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள் அதிகரிக்க கடல் சார்ந்த பகுதிகளில் இருந்த மாங்ரோ காடுகள் அழிக்கப்பட்டதே ஆகும். சதுப்பு நிலங்களில் உள்ளூர் தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நீண்ட கால பாதுகாப்பினை சதுப்பு நிலங்கள் பெறும்,'' என்றார். நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""சதுப்பு நிலங்களில் பல்வேறு உயிரினங்கள் மூலிகை செடிகள் உள்ளன.

  • இங்குள்ள நீராதாரத்தை நம்பியே இவை வாழ்கின்றன. சதுப்பு நிலங்கள் அழியும் போது, இதை சார்ந்துள்ள உயிரினங்கள், தாவரங்கள் அழிந்து போகிறது. வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பது போல் மூலிகை செடிகளையும் வளர்க்க வேண்டும்,'' என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றை அரசும் மக்களும் காப்பாற்ற முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

  • கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""இயற்கையை பாதுகாத்ததினால் சுத்தமான காற்று, நீர், உணவை முன்னோர்கள் பெற்றனர். அதேபோல வருங்கால சந்ததியினர் நல்ல சூழலில் வாழ நாம் தற்போதுள்ள இயற்கையை காப்பாற்ற முன்வரவேண்டும்,''என்றார். மாணவர்களுக்கு மரவியல் பூங்காவை சுற்றி காண்பித்து அங்குள்ள சதுப்பு நில பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை ஹெலினா வரவேற்றார். ஆசிரியர் ஹொனரின்வுட் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment