பந்தலூர் : "வருவாய் துறையின் தேவைகளுக்கு, அதிகாரிகளை மட்டுமே அணுக வேண்டும்; இடைத்தரகர்களை நம்பி ஏமாறக் கூடாது' என அறிவுறுத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், வருவாய் துறை சார்பில், யு.எஸ்.எஸ்.எஸ்., மகளிர் கூட்டமைப்பு குழு நிர்வாகிகளுக்கு, வருவாய் துறை குறித்த சிறப்பு பயிற்சி முகாம், பந்தலூரில் நடத்தப்பட்டது. யு.எஸ்.எஸ்.எஸ்., மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி வரவேற்றார்.
பந்தலூர் தலைமையிட துணை தாசில்தார் குமார்ராஜா, சிறப்பு அழைப்பாளராக பேசியதாவது: அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், வருவாய் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார் என பல நிலைகளிலும் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.
நிலங்கள் குறித்த அனைத்துப் பதிவுகளும், வருவாய் துறை மூலமே மேற்கொள்ளப்படுவதுடன், நிலவரி வசூலித்தல், ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கல், பொது சுகாதாரம், சட்ட ஒழுங்குப் பிரச்னைகளை பாதுகாத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்வது என, வருவாய் துறையினரின் பணிகள் அதிகரித்துள்ளன.
சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சலுகைகள் வழங்க, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் தலைமையில் ஒரு பிரிவு செயல்படுகிறது; இதன் மூலம் ஓய்வூதியம், உதவித்தொகை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 1998ம் ஆண்டுக்கு பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, விவசாய நிலங்களில் நிலப்பட்டா வழங்க தடையுள்ளதால், எம்மாதிரியான நிலங்கள் பெறுவது என்பது குறித்து, வருவாய் துறையினரிடம் ஆலோசித்து பெற வேண்டும்.
மாறாக, அரசு நிலங்களையும், வனப்பகுதிகளையும் ஆக்கிரமித்து, பின் பட்டா கோரி அணுகினால் பயன் கிடைக்காது. பொதுமக்கள், தங்களின் எந்தத் தேவைகளுக்கும் வருவாய் துறையினரை நேரடியாக அணுகலாம்; இடைத்தரகர்களை நம்பி ஏமாறக் கூடாது. இவ்வாறு, குமார்ராஜா பேசினார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நமக்கு தேவையான சான்றுகள், ஆலோசனையை தர வருவாய் முறையினர் முன்வரும் போது, முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார். கவிதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment