Wednesday, August 14, 2013

ஆறுகள் இருந்தும், திட்டங்கள் இல்லை நிறைவேறுமா? நீலகிரி மக்களின் நீண்ட கால கனவு!

ஊட்டி: நீலகிரி மாவட்டம், அப்பர் பவானி சுற்றுப்புற பகுதிகளில் உற்பத்தியாகும் தண்ணீர், 60 சதவீத அளவுக்கு கேரளாவுக்கு சென்று கடலில் கலக்கிறது. "இதனை தமிழகத்துக்கு பயன் படுத்தும் விதத்தில், புதிய திட்டத்தை அரசு அமல்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக- கேரள மாநிலங்களின் முக்கிய குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பவானி ஆறு, நீலகிரியில் உற்பத்தியாகிறது. இங்குள்ள அப்பர் பவானியில் புளியமலை, நாடுகாணிமலை, மடிப்பு மலை, கிங்குருண்டிமலை மற்றும் "வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 1,2' ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட சிற்றோடைகள் உற்பத்தியாகின்றன.
இந்த சிற்றோடைகள் புளிமலை, நாடுகாணி, மடிப்பு மலை என 3 சிற்றாறுகளாக மாறி, சுமார் 2 கி.மீ., தூரத்துக்குப்பின் கிங்குருண்டி என்ற இடத்தில் பவானி நதியாக உருமாறுகின்றன. இந்த நதி தமிழகத்தில் சில கி.மீ., அளவுக்கு மட்டுமே ஓடி, கேரளாவுக்குள் பவானி புழா ஆக மாறுகிறது. தவிர, அப்பர்பவானி அருகிலிருந்து துவங்கும் பக்தவத்சலம் சாகர் ஆறும், கேரள எல்லையில் பவானி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் இந்த ஆறு கீழ்பவானி, துடுக்கி, கோட்டத்தரை ஆகிய வனப்பகுதிகள் வழியாக சென்று முக்காலி பகுதியை அடைகிறது. அங்கிருந்து அட்டப்பாடி, கூடப்பட்டி, அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு செல்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள்:

நீலகிரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து, சிஸ்பாரா ஆறு உற்பத்தியாகி, கேரள மாநிலம் சைலன்ட் வேலி தேசிய பூங்கா வழியாக செல்கிறது. அங்கு குந்திப்புழா என்ற ஆறாக மாறி, முக்காலியில் மீண்டும் பவானி ஆறுடன் சங்கமிக்கிறது. இதேபோல, தமிழக எல்லையில் உள்ள அங்கிண்டா என்ற மலை பகுதியில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள், கேரளாவுக்குள் நுழைந்து எம்முரிபுழா ஆற்றுடன் கலந்து விடுகிறது.

இந்த ஆறும் பவானி ஆற்றுடன் கலந்து விடுகிறது. மேலும், பங்கியாழா மலைப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் பல நீரோடைகள், கேரள மாநிலம் நிலம்பூருக்கு செல்கின்றன. நீலகிரியில் உள்ள மூக்கூர்த்தி சிகரம், நீலகிரி சிகரம் ஆகிய பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள், நியூ அம்பராம்பள்ளம் வழியாக சென்று நிலம்பூர் ஆற்றில் கலக்கிறது.

கேரள கடலில் கலப்பு:

நீலகிரி மலையில் இவ்வாறு உற்பத்தியாகும் பல்வேறு ஆறுகள், தமிழகத்தில் எவ்வித திட்டத்துக்கும் பயன்படுத்தப்படாமல் கேரளாவுக்குள் சென்று கடலில் கலக்கிறது.
இவற்றை தவிர்க்க, பவானி நதி கேரளாவுக்குள் நுழையும் பகுதிகளிலேயே தடுப்பணை கட்டினால், 60 சதவீத நீரை தமிழக குடிநீர் திட்டத்துக்கு அல்லது நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தலாம் என்பதே, கடந்த 40 ஆண்டுகளாக நீர்மேலாண்மையில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகளின் கருத்து.
அ.தி.மு.க., ஆட்சியில் ஆய்வு:

தமிழக விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, கடந்த 2002ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது, நீலகிரி மாவட்டத்தில் முக்கிய ஆறுகள் உற்பத்தியாகும் பகுதிகளில் தமிழக புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் நீர் மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, கிங்ருண்டி என்ற பகுதியில் அணை கட்டி கேரளாவுக்கு செல்லும் பவானி நதியின் கிளை ஓடைகளை தடுத்து, தமிழகத்திற்கு பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த சூழ்நிலையில் தான் கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தில் இருந்து பின்வாங்கியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றங்களுக்கு பின்பு, நீலகிரி நீர் மேலாண்மை திட்ட ஆலோசனைகள் கைவிடப்பட்டன.
மீண்டும் ஆலோசித்தால் பயன்:

தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே முல்லை பெரியாறு உட்பட நீர் பங்கீட்டு பிரச்னைகள் அதிகரித்து வரும் சூழலில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு நதிகள் கேரளாவுக்குள் நுழைந்து கடலில் கலந்து வீணாவதை தடுக்க, புதிய நீர்மேலாண்மை திட்டத்தை அமைக்க மாநில அரசு மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2002ம் ஆண்டை போலவே தற்போதும் ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய திட்டத்தை துவக்கினால், பவானி விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை சேமிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே, பவானி நதியை நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் வேண்டுகோள்.

பொதுப்பணித் துறை சுற்றுச்சூழல் பிரிவின் அதிகாரிகள் சிலர் கூறுகையில்,"மேற்கு தொடர்ச்சி மலைகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் பற்றி, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தினால், அதில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான திட்டங்கள் மட்டுமே எதிர்காலத்தை காப்பதாக அமையும். அதனை ஆய்வாளர்கள் சிந்திக்க வேண்டும். வீணாகும் நீரை நம் மாநிலத்துக்கு பயன்படுத்த வேண்டிய திட்டங்கள் அவசியமாகும்' என்றனர்.

No comments:

Post a Comment