Wednesday, August 14, 2013

அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் செயலாக்கம்: 70 ரூபாய் கட்டணத்தில் சேனல்கள் வசதி

சென்னை:மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான அரசு "கேபிள் டிவி' சேவை, செப்., 2ம் தேதி முதல் துவங்கும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு "கேபிள் டிவி'யில் மாதக்கட்டணம் 70 ரூபாயில், 90 சேனல்கள் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக, அரசு "கேபிள் டிவி' நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, 432 இணைப்புகளாக சுருங்கிவிட்டது.

தி.மு.க., அரசால் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், என் அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழுநேர தலைவர் மற்றும் ஒரு நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில், தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில்நுட்ப "கேபிள் டிவி' கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு "கேபிள் டிவி' புனரமைக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனம், "தமிழ்நாடு அரசு "கேபிள் டிவி' நிறுவனம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும்,"கேபிள் டிவி' சேவையைத் தொடங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்களை, அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்து 344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், மிகுந்த ஆர்வத்துடன், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை, 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்குதடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசு "கேபிள் டிவி' ஒளிபரப்பின் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். கட்டணச் சேனல்களை பெற, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில், கட்டணச் சேனல்களும், அரசு "கேபிள் டிவி' மூலம் வழங்கப்படும்.
செப்டம்பர் 2ம் தேதி முதல் ஒளிபரப்புச் சேவைகள் துவங்கப்பட்டு, குறைந்த செலவில் நிறைவான சேவையை, அரசு "கேபிள் டிவி' நிறுவனம், தமிழக மக்களுக்கு வழங்கும். அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், "டிவி' சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே "கேபிள் டிவி' ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும்.

இந்த ஒளிபரப்பை வழங்கும், "கேபிள் டிவி' ஆபரேட்டர்களிடமிருந்து கட்டணமாக, ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தால் வசூலிக்கப்படும். மிகக் குறைந்த கட்டணத்தில், "கேபிள் டிவி' இணைப்பை, தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

என்ன செய்ய வேண்டும்!""அரசு, "கேபிள் டிவி' ஒளிபரப்பைப் பெற, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்ற கேள்விக்கு, அரசு "கேபிள் டிவி' நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:"கேபிள்' ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்துள்ளதால், தற்போது, "கேபிள்' இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள், அந்த இணைப்பிலேயே, அரசு "கேபிள் டிவி' இணைப்பை பெற முடியும். அரசு, "கேபிள் டிவி'யைப் பெற, அவர்கள் தனியாக யாரையும் அணுக தேவையில்லை.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னைக்கு?கடந்த 2002ம் ஆண்டு, "கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம்' என்ற சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய நான்கு நகரங்களில் இந்த சட்டம் முன் மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இதன்படி, இந்த நகரங்களில் உள்ளவர்கள், கட்டண சேனல்களை பெறுவது என்றால், "செட் - டாப் பாக்ஸ்' உதவியுடன் மட்டுமே பெற முடியும். இதற்கு எதிராக பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டதால், கடந்த 2006ம் ஆண்டு முதல், சென்னை தவிர மற்ற மூன்று பெருநகரங்களிலும், இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. "சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சென்னையிலும் அரசு, "கேபிள் டிவி' கால் பதிக்கும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

No comments:

Post a Comment