Saturday, September 13, 2014

பறவைகளின் பொருள் பொதிந்த பேச்சரவம் கேட்டிடுவோம்

சிட்டுக் குருவிகள் நம் கண்ணில் இப்போதெல்லாம் தட்டுப்படாததால் அவற்றின் இனமே அழிந்துவிட்டதாக அங்கலாய்க்கிறோம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் நகரமயமாதலின் விளைவாகத் தங்களுக்கு ஏற்ற வாழ்விடங்களைத் தேடி அவை இடம் பெயர்ந்துவிட்டன என்பதே உண்மை.
குயில் மட்டுமல்ல, எத்தனையோ பறவைகள் நம் கண்ணில் படாமல் மரங்களில் தம்மை மறைத்துக் கொண்டு கூவுகின்றன. இவற்றை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்பது கிடையாது.
ஏதாவது ஒரு பறவையின் கூவல் கேட்காமல் நின்றுவிட்டால், அந்தப் பறவை எங்கே போயிருக்கும் என்ற அக்கறை நம்மிடம் இல்லை.
ஒரு பறவையின் கத்தல் அல்லது கூவல் மிகுந்த மன ஆறுதலைத் தரக்கூடியது. மனத்தில் பல்வேறு விதமான உணர்வு அலைகளை எழுப்ப வல்லது.
வால்மீகியின் கதைதான் நாம் அறிந்த ஒன்றாயிற்றே! வேடன் வால்மீகியின் அம்பு பட்டு வீழ்ந்த இணைப் பறவையின் பிரிவை ஆற்றமாட்டாது ஏக்கக் குரல் எழுப்பிய கிரெüஞ்சப் பட்சியின் கூவல், வால்மீகியைக் மகாகவியாக்கி ராமாயண காவியத்தையே சிருஷ்டிக்க வைத்து விடவில்லையா?
இந்த வகையில் கிராமத்தில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதிகாலை வேளையில் தோப்புகளில் கேட்கும் பல்வேறு புள்ளினங்களின் ஆரவாரத்துடன் பொழுது புலரும். ஒருநாளின் பல்வேறு பொழுதுகளில் வித விதமானப் பறவைகள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியும்.
பறவைகளின் கூவலை வைத்தே அவற்றை அடையாளம் கண்டு பெயர் சொல்லும் வழக்கம் இன்றும் கிராமவாசிகளிடம் உண்டு. தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் பறவைகளின் ஒலிகள் குறித்து தெரிவித்த தகவல்கள் சுவாரஸ்யமானவை:
மூன்றாம் ஜாமத்தில்தான் கீச்சாங்குருவி கத்தும். அது விடிவதற்கு வெகுநேரம் முன்னதாகவே விவசாயிகளை எழுப்பிவிட்டு விடும். ஒவ்வொரு ஜாமத்துக்கும் கத்துகிற பறவையின் பெயர் சாமக் கோழி.
ஏதாவது வேலையாக வெளியே போகும்போது, கருவாட்டுவால் குருவி என்கிற வலியன் குருவி கத்திக் கொண்டே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக குறுக்காகப் பறந்து போனால், போகிற காரியம் பலிக்கும். இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக கத்திக் கொண்டு பறந்தால், சகுனம் சரியில்லை.
மழைக் காலங்களில் கானாங்கோழிகள் சத்தம் அதிகமாகக் கேட்கும். கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளை நாடிச் செல்லும் கானாங்கோழிகளை "பறக்கத் தெரியாத பறவை' என்றுதான் சொல்ல வேண்டும். அக்காக் குருவி கத்தினால் ஆற்றில் தண்ணீர் வரும்.
ஊமைக்கோட்டான் என்று ஒரு பறவை இருக்கிறது. நாம் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும்போது, நமக்கு முன்னால் சாலையில் வந்து நிற்கும். விழிகளை உருட்டி கர்ண கடூரமாக குரல் எழுப்பும். நீங்கள் அதைக் கடந்து சென்றுவிட்டால், நீங்கள் செல்லும் பாதையின் முன்னால் மீண்டும் போய் நின்று கொண்டு பயமுறுத்தும். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இப்படிச் செய்துவிட்டு பின்பு தானே பறந்து போய்விடும்.
அரிக்குருவிகள் சத்தம் கேட்டால், விளைந்து நிற்கும் நெற்கதிர்களுக்கு ஆபத்து. அறுவடைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வரும் அவை தானியங்களை கொத்திக் கொத்தித் தின்றுவிடும்.
பறவை இயல் ஆராய்ச்சியாளர் ஒருவர், பறவைகள் எழுப்பும் ஒலிகள் குறித்த சில தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.
"அன்றில் பறவை இரவு நேரங்களில் கரையும். "க்ரியூ.. க்ரியூ என்று அவை கத்தினால் கட்டாயம் மழை வரும். உடனே ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அவற்றை மேய்ச்சலில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். உடல் கருநீலமாக இருக்கும். தலைமட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். அன்றிலில் ஒன்று இறந்துவிட்டால் மற்றொன்றும் இறந்துவிடும்.
வயல்வெளிகளில் காவல் காப்பவர்களை டிட்டிடியூ... டிட்டிடியூ என்று கத்தி ஒரு பறவை எச்சரிக்கும். யாரோ ஒரு ஆள் வந்து கொண்டிருக்கிறார் என்று இதற்கு அர்த்தம். இந்தப் பறவையின் பெயரே "ஆள்காட்டிப் பறவை'தான்!
கூழைக்கடா என்று ஒரு பறவை இருக்கிறது. இதை "செங்கால் நாரை' என்றும் சொல்வது உண்டு. சத்திமுற்றத்துப் புலவர் "நாராய் நாராய் செங்கால் நாராய்' என்று பாடியது இந்தப் பறவையைப் பார்த்துதான். இது மனிதர்களின் குரலை அப்படியே "மிமிக்ரி' செய்யும். கூழைக்கடா முழு வளர்ச்சி அடைந்தவுடன் அதன் குரலை இழந்துவிடும். இணையை அழைப்பதற்குக்கூட தன் அலகுகளை ஒன்றோடு ஒன்று மோதி ஒலி உண்டாக்கத்தான் இதனால் முடியும்!
அசுணம் என்பது இசையறிந்த பறவை. அபசுரத்தைக் கேட்டால் இது இறந்துவிடும் என்று சங்கப்பாடல்கள் கூறுகின்றன.
மணிக்கொடி எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி "மகா கவிகள்' என்ற தலைப்பில், பறவைகளைப் பற்றி ஒரு காவியமே எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைத் தொகுப்பின் பெயர்கூட "காட்டு வாத்து' தான்.
எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் பிச்சமூர்த்தியை சந்திக்க ஒரு மழை நாளில் சாலியமங்கலம் கிராமத்துக்கு சென்றபோது, நீண்ட வெண்ணிறத்தாடி காற்றில் அலை பாய மழையில் நனைந்தபடி தண்ணீர்ப் பரப்பை ரசித்துக் கொண்டு நின்றிருந்தார் ந. பிச்சமூர்த்தி.
"இது ஒரு அபூர்வமான பறவை. இதோட பேரு முக்குளித்தான். இது தண்ணிக்குள்ள மீன் மாதிரி நீந்தி வாழும். அதே நேரத்துல தண்ணிக்குள்ளே இருந்து மழை பெய்யற நேரத்துல வெளியே வந்து ஆகாய வானத்துல பறக்கும் பாருங்க... அற்புதமான சிருஷ்டி. தண்ணீர் கலங்கினால் இதுக்குப் பிடிக்காது. தண்ணீர் அடிமட்டத்துலே இருந்து நீந்தி வந்து மரத்துமேல போய் உட்காந்துக்கும். வானத்துலயும் பறக்கும். குக்கூ குக்கூன்னு அதுக்குள்ள சத்தம் பாருங்க..' என்று வியந்தார் பிச்சமூர்த்தி.
இந்தப் பறவைக்கு முக்குளித்தான் என்று பெயரிட்ட கிராமவாசியைவிட மிகச் சிறந்த கவிஞன் வேறு யார் இந்த உலகில் இருக்க முடியும்?
சிட்டுக்குருவிகளின் கீச்சொலிகள் கேட்காத வீட்டுத் தாழ்வாரங்களை கிராமத்தில் பார்க்கவே முடியாது. காக்கையின் கரகரப்பான குரலை யாரும் வெறுத்துவிடக் கூடாது என்பதற்காகவே காக்கை கரைவதை விருந்தினர் வருகையின் முன்னறிவிப்பாக சொல்லி வைத்தனர் போலும்.
ஒரு முனிவர் தாம் பெற்ற சாபத்தின் காரணமாக காக்கையாக மாறிவிடுகிறார். அவர்தான் காகபுசுண்டர். காக்கைதான் ராமாயணக் கதையை கருடனுக்குச் சொன்னதாக நமது புராணங்கள் கூறுகின்றன.
"காவென்று கத்திடுங் காக்கை என்றன் கண்ணுக்கினிய கருநிறக் காக்கை' என்றும் "பின்னர் தெருவிலோர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும்' எனவும் சிட்டுக் குருவியின் கீச்சொலியை "குருவித் தமிழ்' என்றும் ஒலிகளை பலபட ரசித்து பாடல்கள் புனைந்தான் பாரதி. பாரதியின் "காளிகோயில்' என்ற வசன கவிதையில் பல்வேறு பறவைகளின் குரல்களை வர்ணிப்பதைப் பாருங்கள்!
கிளி : தைர்யா, தைர்யா, தைர்யா
குயில்கள் : சபாஷ்! சபாஷ்! சபாஷ்!
குருவிகள் : டிர்ர்ர்... டிர்ர்ர்ர்
நாகணவாய் : குபுக்... ஜீவஜீவ ஜீவஜீவ
முருகன் : சிவசிவ.. சிவசிவ... சிவசிவா...
காக்கை : எங்கோ வாழ்! எங்கோ வாழ்!
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் "பரத்வாஜம்' என்ற குருவியின் சம்ஸ்கிருதப் பெயரை "கரிச்சான்' என்ற தமிழ்ப் பெயராக மாற்றி அந்தப் புனைபெயரில் கதைகள் எழுதியதும், அவருடைய சீடரான நாராயணசாமி கு.ப.ரா மீதுள்ள மதிப்பால் "கரிச்சான்குஞ்சு' என்ற பெயரில் எழுதிப் புகழ்பெற்றதும் இலக்கிய உலகம் அறிந்த செய்தி.
எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயன், கு.ப.ரா. மேலும் சில நண்பர்களுடன் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, கரிச்சான் எங்கோ கத்துவதைக் கேட்டு பேச்சை நிறுத்தி "அதன் பெயர்தான் பரத்வாஜம்' என்று சொல்லிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தாராம்!
சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் அழைத்துக் கொண்டு மதுரையை நோக்கி அடர்ந்த கானகத்தின் வழியே செல்லும்போது, இரவு, பகல் தெரியாமல் இருட்டாக இருக்கிறது. பறவைகளின் குரல் ஒலிகளை வைத்து இது அதிகாலை, நண்பகல், மாலை, இரவு, நள்ளிரவு என்று சொல்லிக் கொண்டு வருவதாகப் பாடல் வரிகள் வருகின்றன.
ஆண்டாள் பாடிய திருப்பாவையில் "கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?' என்று தோழிகளை எழுப்புவாள். ஆனைச்சாத்தன் என்கிற குருவிக் கூட்டத்தின் கீச் சொலிகளைக் கேளாமல் அப்படி என்ன ஆழ்ந்த உறக்கம்?
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் பொருளற்றப் புலம்பல்களைக் கேட்டதெல்லாம் போதும். வாருங்கள், பறவைகளின் பொருள் பொதிந்த பேச்சரவம் கேட்டிடுவோம்

No comments:

Post a Comment