Wednesday, February 9, 2011

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை

1) நீரின்றி அமையாது உலகு 2) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே போன்ற அந்தக்காலத் தமிழ் முது மொழிகளிலிருந்தே வாழ்வாதாரமான தண்ணீரின் தேவையையும் முக்கியத்துவத்தையும் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது தெளிவு.

தொன்று தொட்டே தமிழகத்தில் குறிப்பாக பல்லவர் ஆண்ட தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆறுகளும் ஏரிகளும் மழையை எதிர் பார்த்தவையே. வற்றாத ஜீவநதிகள் இப்பகுதியில் ஏன் பெருவாரியான தமிழர் வாழ்ந்த பகுதியிலேயே இல்லை என்றே சொல்லலாம். எனவே ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது.

காடுகளை அழித்து புதிய நாடுகள் உருவான போதும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவை நீர். எனவேதான் சங்கத் தமிழ் மன்னர்கள் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெறுகும் என்பதை எந்தளவுக்கு அந்தக் கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி ஒரு சான்று!

கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான "சிறுபஞ்சமூலத்தில் " காரியாசான் சுவர்கத்துக்குப் போகும் வழி என எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) தினிது

(குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரக்கிளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல்,தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்று சொல்லக் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் உண்டாக்கியவன் சொர்கத்துக்கு இனிதாகப் போவான்)

அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது கி பி 2ஆம் நூற்றாண்டிலேயே நல்லாதனார் "திரிகடுகம்" என்னும் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலில் பின்வருமாறு கூருகிறார்.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.

( உலகத்தில் மேலான புகழை நாட்டியவனும்,சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனும், குடிக்க நீர் குறைவு படாத படி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம்மூவரும் எக்காலத்திலும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர்கள்)

எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் எழுந்தும் வீழ்ந்தும் போனாலும் ,எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும் 1800 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டுவித்த கரிகால் சோழன் பெயர் இன்றளவும் நிலைத்திருப்பது நல்லாதனார் கணித்தது எவ்வளவு உண்மை என நமக்குணர்த்துகிறது.

இதே அடிப்படையில் பல்லவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் பல 'பிரமதேயம் " என்னும் குடியிருப்புகளை ஏற்படுத்தியதல்லாது அந்தக் குடியிருப்புகளுக்கு வேண்டிய நீர் ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். ( பிரமதேயமோ அல்லது அது எதற்காய் உருவாக்கப் பட்டது என்பதோ இக்கட்டுரையின் பேசு பொருளல்ல.ஒவ்வொரு குடியிருப்பு ஏற்படுத்தும் போதும் அதற்குத் தேவையான நீராதாரங்களையும் சேர்த்தே அக்கால மன்னர்கள் எழுப்புவித்தார்கள் என்பதே குறிப்பிடுகிறேன்) எடுத்துக் காட்டாக முதலாம் பரமேசுவர மன்னனின் ஆட்சிக் காலத்தில் ( கி பி 669-700) பரமேசுவர மங்கலம் என்ற பெயரில் பிரமதேயமாக நிலம் கொடுத்தான்.அத்துடன் அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்று ஒரு ஏரியை ஏற்ப்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர பெரும்பிடுகு என்னும் கால்வாயையும், அக்கால்வாயிலிருந்து நலைவாய், தலைப் பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதியளித்தான் என்பதனை கூரம் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.

இதே போல இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் உதய சந்திர மண்டலம், ஏகதீர மங்கலம், நயதீர மங்கலம் போன்ற பல ஊர்களை உருவாக்க தானமாக நிலம் கொடுத்து அதற்குத் தேவையான நீராதாரங்களுக்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளான் என்பதை பல செப்பேடுகள் மூலம் அறிகிறோம்.

தொண்டை நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மிகச் சிறந்த குடியிருப்பு உத்திர மேரூர். சுமார் 5 சதுர கீ மி பரப்பளவில் இந்தப் பரந்த ஊர் அமைந்திருந்தது.10 சேரிகளும் 15 பிடாகை ஊர்களும் இதனுள் அடக்கம். (இந்த ஊரில்தான் குடஓலை முறையில் நிர்வாகக் குழுக்கள் வாரியங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கே தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட நற்பணி நடந்தது) இந்த ஊரின் ஜீவ நாடியாக அமைந்தது "வைரமேகத் தடாகம்" என்னும் பேரேரியாகும். கி பி 739லேயே மகாசபை என்ற ஓர் அமைப்பு செயல் பட்டதும் இச்சபையின் கீழ் பல வாரியங்கள் பகுக்கப் பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கி பி 878ல் ஏரி வாரியம் என்றோரு வாரியம் செயல்பட்டிருப்பதே நீர்ப்பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் அளிக்கப் பட்டு வந்துள்ள முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

அமைத்ததோடு மட்டுமின்றி வயிரமேகத் தடாகத்தை ஆண்டு தோரும் குழிகுத்திப் பராமரிப்பது ( தூர் வாருவது) முறையாகச் செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கென வணிகர்களும் செல்வந்தர்களும் நன்கொடையும் அளித்துள்ளனர்.கி பி 739லேயே குழி குத்தப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. சேட்டத்தரயன் தான வேந்தன் என்பவன் 20 கழஞ்சு பொன்னும் எரு விலையால் வந்த திரவியத்தை உத்திர மேரூர் சபையினரிடம் கொடுத்து குழி குத்த ஏற்பாடு செய்தான், தந்தி வர்மன் (கி பி 803-ல்) 5 பட்டி நிலத்தைக் கொடையாகப் பெற்ற பெருங்குறி சபையார் அதனைக் கொண்டு ஏரியைத் தோண்டி கரையை உயர்த்தினர். கி பி 883 ல் கழுக்குன்றன் எனும் வணிகன் 100 கழஞ்சு பொன்னும் 28 காடி நெல்லும் கொடையளித்தான் . கி பி 886ல் மன்னிப்பாக்கிழான் என்ற வணிகன் 100 கழஞ்சு பொன்னும் கி பி 886 ல் அவனே மற்றும் 100 கழஞ்சு பொன்னும் கொடுத்தான் என்று பலப் பல செய்திகள் மூலம் எப்படி அந்தக் காலத்தில் தமிழர் நீராதாரங்களான ஏரி,குளம் , கிணறு முதலானவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளை வெட்டுவித்தும் பராமரித்தும் வந்துள்ளனர் என அறியமுடிகிறது.

பொதுவாகவே ஆண்டு தோரும் தூர் வாரப் பட்டுள்ளதை மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முன்னரே சொன்னது போல் தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது. கி பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயேமக்கள் ஏரிகளை உருவாக்கியுள்ளனர்.

கி பி 550ல் சமணத் துறவி வஜ்ர நந்திக்கு பருத்திக் குன்றம் என்ற ஊரை பள்ளிச் சாந்தமாக கொடுத்த போதே ஏந்தல் ஏரி,வேள்வடுகன் ஏரி மற்றும் நீலபாடிவதி, மூலை ஏற்றம், முருக்கங்கேணி போன்ற நீராதாரங்கள் அந்த ஊரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
கோவில் கட்டும் போதும் ஏரி தோண்டுவதும் முக்கியமான பணியாக நற்பலனைத் தரும் பணியாக மக்கள் கருதினர். காட்டுத் தும்பூரில் 563 ஆம் ஆண்டு கனக வல்லி ஏரி உருவாக்கப்பட்டது. உத்திரமேரூருக்கருகில் மல்லியங்கரணை ஏரி, வெள்ளேரி, தும்பனேரி கார்வதி ஏரி என பல ஏரிகள் ஏற்பட்டுள்ளன.இப்படிப் பலப்பல உதாரணங்கள்.

பின்வந்த சோழர்கள் 11ஆம் நூற்றாண்டில் எடுப்புவித்த சோழகங்க ஏரி( இன்றைய பொன்னேரி) வீர நாராணம் ஏரி ( இன்றைய வீராணம் ஏரி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏரிகளிலிருந்து நீரை வெளியே எடுப்பதற்குப் பல வழிகளைப் பின்பற்றியுள்ளனர் நம் முன்னோர். கலிங்கு, மதகு , தூம்பு என சில கட்டுமானங்களின் மூலம் நீரை முறையாகப் பயன் படுத்தியுள்ளனர். இன்றைய நீர் நிர்வாகம் அல்லது நீர் மேலாண்மை என்று சொல்லக்கூடிய அறிவுத்துதை (water Management) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்களிடம் இருந்துள்ளது.

நாட்டுக்கால், ஆற்றுக்கால், ஊற்றுக்கால் எனும் பெயர்களில் அக்காலத்தில் கால்வாய்கள் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றைப் பராமரிக்கவும் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் தனிச்சையாகக் கால் வெட்டுவோர் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீர் நிலைகளை ஏற்படுத்துவதை தம் வாழ்வின் பெரும் தர்மமாக நினைத்துள்ளனர் மக்கள் . திருவெள்ளரை ஸ்வஸ்திகக் கிணறு ( இன்று நல்ல தமிழில் "நாலு மூலைக் கேணி" என்று அழைக்கப் படுகிறது) அருகில் உள்ள கல்வெட்டு

கண்டார்காணா உலகத்தே காதல் செய்து நில்லாதே
பண்டே பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நய்யதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைமினே

என்கிறது .அதாவது தம் ஆயுளுக்குப் பிறகும் தம் பெயர் சொல்வது நீருதவும் தர்மம் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் நம் மக்கள் உணர்ந்து அப்படிச் செய்யப் புகுந்தவர்களை எச்சரித்துள்ளனர்

"கீழ்வேளூர் சபையார் தன்மம். இதற்கு அஹிதம்
செய்தவன் காவிரி குலை குத்தின பாவங்கொள்வான் "

என்று தாராசுரத்தில் கிடைத்த கல்வெட்டு "காவிரிக் கரையைச் சிதைத்த பாவம்" என்று பாவச் செயல்களுக்கே ஒரு reference point ஆக நீர் நிலைகளை அழிப்பதைக் கொள்கிறது

கட்டுரையின் பெறுவாரியான பகுதிகள் நான் வாசித்த முனைவர் சொ.சாந்தலிங்கத்தின் " தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் " என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

ஆனால் இன்றைய தமிழகத்திலே நடப்பதென்ன ?

No comments:

Post a Comment