Monday, November 29, 2010

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை,'




 



""நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை,'' என, ஜெர்மன் தொழில்நுட்ப பூங்கா இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் நடந்த, "பொருட்களின் எடை, அளவு சட்டம் 1976 மற்றும்  புதிய அளவீடுகள் சட்டம் 2009' கருத்தரங்கு சென்னையில் நடந்தது.பொருட்களின், எடை, அளவு சட்டத்தின் நிறை குறைகளை பற்றி ஜெர்மன் தொழில் நுட்ப பூங்கா இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சட்டங்கள், சாதாரண மக்களுக்கு சென்றடையவில்லை. மிக நுட்பமான விளக்கங்களுடன் உள்ளதால், சட்ட வல்லுனர்களே ஒன்றுக்கு இரண்டுமுறை படித்தால் மட்டுமே புரிகிறது. இதனால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, மிகக் குறைவாகவே இருக்கிறது. சட்டங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏற்ற வசதிகளை, அரசு செய்ய வேண்டும்.நாம் வாங்கும் பொருட்களின் அளவு குறித்து கவனிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்ரோல் பங்க்கில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையானால், அதில் 1 சதவீதம் தவறு நடந்தால் கூட, நாள் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய், அந்த பெட்ரோல் பங்க்கிற்கு கிடைத்து விடுகிறது. நாட்டில் 25 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இப்படி பலமடங்கு நுகர்வோரின் பணம் நிறுவனங்களால் சுரண்டப்படுகிறது.பொருட்களின் எடை மற்றும் அளவுக்கான சட்டத்தை இந்திய அரசு 1976ல் உருவாக்கியது. அதன் பின் 2009ல் புதிய அளவீடுகள் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த சட்டம் சரியான முறையில் மக்களுக்கு சென்று சேரவில்லை. இந்த சட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.குறிப்பாக, பொருட்களின் எடையில் முறைகேடு செய்பவர்களுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் முகவரி, விலை, காலாவதியாகும் தேதி, அனைத்தும் ஒரே இடத்தில், மக்கள் புரிந்து கொள்ளும் வகையில்  பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இறக்குமதி செய்யும் பொருட்களில், இருக்கும் விளக்கங்கள் சீனா,கொரிய, மொழிகளில் இருக்கும். இவற்றை விற்பதும் குற்றமே. ஒரு பொருளை மற்றொருவரிடம் இருந்து வாங்கி, தங்கள்  நிறுவனத்தின்  பெயரில் விற்பனை செய்பவர்களும்,  தவறுக்கு பொறுப்பாவார்கள்.பொருளின் மீது குறிப்பிட்டிருக்கும் அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. பால்,குளிர்பானங்கள் ஆகியவற்றை குளிரூட்டுவதால் விலை அதிகமாக வைத்து விற்கின்றனர். அவ்வாறு செய்வதும் குற்றமாகும். சில்லறை விற்பனை விலைக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டி பொருளின் விலையை அதிகமாக விற்பதும், இந்த சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.மருத்துவ பொருட்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை செய்யும் போது, பொட்டலங்களின் மீது அதன் நிகர எடையை குறிப்பிட்டிருக்க வேண்டும்.இது தவிர அதிகாரிகளும், அவ்வப்போது கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள  வேண்டும். இந்தியாவில் 2.1 கோடி விற்பனையாளர்கள் உள்ளனர். ஆனால், 2 ஆயிரத்து 500 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இந்தத் துறையில் இருக்கும் அதிகாரிகளின் பற்றாக்குறையும் அதிகமான தவறுகள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.தவறு செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. அதிகப்படியான அபராதம் மற்றும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி பேசினார்.விழாவில், கூட்டுறவுத்துறை பதிவாளர் ஜதீந்திர நாத் ஸ்வைன், சிவில் சப்ளை கமிஷனர் பாலசந்திரன், இந்திய நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த ராஜன், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment