தமிழக அரசு நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக, நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அளித்த பரிந்துரைகள் பலவற்றை தமிழக அரசு ஏற்றுள்ளது. எனினும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.
தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும், லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்கவும், சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி இரண்டாவது அறிக்கையை 2008 அக்டோபர் 3ம் தேதி அளித்தது. இந்த பரிந்துரைகளில், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை குறித்த அம்சங்கள் ஆராயப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை:
நிர்வாக சீர்திருத்த கமிட்டியின் பரிந்துரைகள், அவற்றின் மீதான அரசின் முடிவுகள்.
* பணிகள் தொடர்பாக சட்டரீதியான மற்றும் அரசியலமைப்புச் சட்ட அம்சங்கள் மாற்றப்பட வேண்டும். சட்டவிதி 311 நீக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தின் 311வது பிரிவு, அரசு ஊழியர்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது. எந்த ஒரு ஊழியரையும் சட்டப்படியான நடைமுறைகளின் படி விசாரிக்காமல் டிஸ்மிஸ் செய்ய முடியாது என, அந்த பிரிவு கூறுகிறது. சட்ட விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தை உயரதிகாரிகள் சரியாக கடைபிடித்தாலே, பணிகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். எனவே இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.
* ஊழலை ஒழிக்கும் வகையில் விதிகளில் வலுவான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். இது பொதுவான அறிவுரை. இதன் மீது நடவடிக்கை தேவையில்லை.
* அனைத்து மட்டத்திலும் உள்ள அதிகாரிகளால் சட்ட விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும். இந்த பரிந்துரை பொதுவாக உள்ளது. விதிகளை சரியாக பயன்படுத்தினாலே, ஊழலை ஒழிக்க முடியும். எனவே நடவடிக்கை தேவையில்லை.
* குரூப்- சி பணியிடங்களுக்கு மாவட்ட அளவில், மாவட்ட அதிகாரிகளால் நியமிக்கப்பட வேண்டும். அரசுப் பணியில் சிறந்த நபர்களை நியமிக்க வேண்டியிருப்பதால், மாநில அளவில் தான் நியமனம் நடக்க வேண்டும். எனவே இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.
* தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளை மாற்றியமைத்து, குறைக்க வேண்டும். பணியாளர்களின் எண்ணிக்கையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, தலைமைச் செயலக துறைகளை மாற்றியமைப்பது தொடர்பாக அந்த கமிட்டி அளிக்கும் அறிக்கைபடி முடிவு எடுக்கப்படும். எனவே, அனைத்து துறைகளும் தங்களது பணியாளர்கள் பற்றிய விவரங்களை மதிப்பீடு செய்து, பணியாளர் நலத் துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்
* கோப்புகள் இரண்டு இடங்களுக்கு மேல் பார்வைக்கு செல்லக் கூடாது. மூன்றாவது மட்டம், முடிவு எடுக்கும் இடமாக இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் கோப்புகளை இதுபோன்ற பரிசீலிக்கும் முறை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முடிவு எடுக்கும் மட்டம் உட்பட மூன்று மட்டங்களில் மட்டுமே கோப்புகள் பரிசீலிக்கப்படும். இந்த பரிந்துரை ஏற்கப்படும். தொழில்நுட்ப ரீதியிலான கோப்புகளை, சார்புசெயலர் அந்தஸ்துக்கு மேல் தான் பரிசீலிக்க வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.
* ஊழல் நடப்பதற்கு உகந்த இடங்களை கண்டறிந்து, அங்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். இது பொதுவான விவகாரம். ஏற்கனவே உள்ள விதிகளை கடுமையாக அமல்படுத்தினாலே, ஊழலை ஒழித்துவிட முடியும். எனவே எந்த நடவடிக்கையும் தேவையில்லை.
விதிகளை தளர்த்தக் கூடாது: விதிகளை தளர்த்துவது தொடர்பாக ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அரசின் சுயாட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. சுயாட்சி அரசை, விதிகள் கட்டிப்போட்டுவிடக் கூடாது. எனவே இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.
* அனைத்து உத்தரவுகளும் சட்டப்பூர்வ பின்னணியை கொண்ட உத்தரவுகளாக இருக்க வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.
* தலைமைச் செயலக ஊழியர்கள் இடமாற்றத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டங்களுக்கும், மாவட்டங்களில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தலைமைச் செயலக ஊழியர்களுக்கான கல்வித் தகுதி மற்றவர்களை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பணியாளர்களை விட தலைமைச் செயலக பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்படுகிறது. தலைமைச் செயலக பிரிவு அலுவலர், மாவட்டங்களில் துணை கலெக்டருக்கு இணையான சம்பளத்தை பெறுகிறார். இதற்காக, பிரிவு அலுவலரை துணை கலெக்டராக நியமிக்க முடியாது.
* துறைத் தலைவர்களாக அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்க வேண்டும். இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.
* தபால்கள் மற்றும் கோப்புகளை விரைவாக அனுப்ப வேண்டும். கிளார்க்குகளின் கையெழுத்துக்காக காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். அந்த அலுவலகத்தின் தலைவரே, தபால் நிலையிலேயே முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.
* அதிகாரிகள் தங்களது பொறுப்புகள் மற்றும் சவால்களை ஏற்க வேண்டும். சுயமாக முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவுக்கான பொறுப்புடைமையை அவர்கள் ஏற்க வேண்டும். அனைத்து அதிகாரிகளுக்கும் கோப்புகளை அனுப்பும் முறையை நிறுத்த வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.
No comments:
Post a Comment