Thursday, January 27, 2011

பூவின் மொழி... நிறமா... மணமா...? ஊட்டிக்கு வந்தால் 'இதம்' புரியும்



Front page news and headlines today
கோடை சீசன்... ஊட்டியின் சுற்றுலா மையங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 'கால் வைக்க' முடியாத அளவுக்கு கூட்டம். சமவெளியில் 'சுடும் வெயிலால்' உண்டான உஷ்ணத்தை தணிக்க எண்ணும் மக்கள், இதமான குளிர் காற்றை தேடி அடைக்கலமாக வரும் ஊட்டியில்,பசுமை கொஞ்சும் இயற்கை அழகும், வண்ண மலர்களோடு 'ரீங்காரம்' பாடும் வண்டுகளும் அவர்களை வரவேற்க காத்து கிடக்கின்றன.

இந்த பூக்களை சுமந்த மலையரசியின் மகுடத்திலா சில மாதங்களுக்கு முன் 'உடைசல்' ஏற்பட்டது;வியப்பூட்டும் 'பட்டு போர்வையின்' பசுமைக்குள்ளா நிலம் சரிந்த பெரும் சோகங்கள் நிகழ்தன; இதமான தென்றல் தவழும் 'அமைதி' பள்ளதாக்கிலா 51 உயிர்கள் மூச்சு முட்டி ஜீவ சமாதியாகின என்ற கேள்விகள் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் மனதிலும் எழும் அளவுக்கு, 'ஏழைகளின் சுவிட்சர்லாந்து' என்றழைக்கப்படும் 'ஊட்டி' தனது அழகை மெருகூட்டியுள்ளது. கடந்த நவம்பர் மாத பாதிப்புகளின் சுவடே தெரியாத அளவுக்கு பொலிவாக்கப்பட்டுள்ள இந்த 'சொர்க்கபூமிக்கு' நீங்கள் வருவதற்கு முன், உங்களை வழிநடத்தி செல்லும் சில முக்கிய தகவல்கள் இதோ...!

ஊட்டி தாவரவியல் பூங்கா: ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட காய்கறி தோட்டம் பராமரிக்காமல் விடப்பட்டதால், அப்பகுதியில் ஒரு பூங்காவை துவக்க, ஊட்டியில் வசித்து வந்த ஆங்கிலேயர்கள் நன்கொடை மற்றும் சந்தா வசூலித்தனர். இதில், 1847ம் ஆண்டில் மெட்ராஸ் கவர்னராக இருந்த டூவிடேல் என்பவர், பூங்கா மேம்பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார். இதனை தொடர்ந்து,பூங்காவை பொலிவாக்கும் வகையில், லண்டனில் உள்ள 'க்யூ' பூங்காவில் பணிபுரிந்த அனுபவத்தை பெற்றிருந்த தோட்டக்கலை நிபுணர் ஐவர் என்பவர் பூங்கா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பூங்காவின் சிறிய பகுதி காய்கறி தோட்டமாகவும், பெரும்பாலான பகுதி சோலையாகவும், முட்புதர் சூழ்ந்தும் இருந்ததை மாற்றி,10 ஆண்டுகள் போராடி லண்டன் 'க்யூ' பூங்காவை போல அழகிய புல்தரைகள் மற்றும் பூந்தோட்டமாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை மாற்றினார்.

இதை தவிர, தோட்டக்கலை துறையின் மூலம் ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 117 குடும்பங்களை சேர்ந்த 2,000 ரக தாவரங்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல், 144 ரக பெரணிகள், 350 வகை ரோஜாக்கள், 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிகள், டைனோசர் காலத்தில் இருந்த 'ஜிங்கோபைலபா', முதன் முதலில் பேப்பர் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 'போஜ்பத்தர்' என்ற மரம் உட்பட ஏராளமான மர வகைகள் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

மான் பூங்கா: ஊட்டி ஏரியின் மறு கரையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மான் பூங்கா 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 22 கடமான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய படகு இல்ல சாலை வழியாக இங்கு செல்லலாம். புதிய வரவாக இரண்டு மான் குட்டிகள் 'துள்ளி திரிந்து' வருகின்றன.

தொட்டபெட்டா சிகரம்: தென்னிந்தியாவின் உயரமான சிகரமாக கருதப்படும் தொட்டபெட்டா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,623 மீ., உயரத்தில் உள்ளது. நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர் மொழியில், தொட்டபெட்டா என்றால் 'உயரமான மலை' என்று பொருள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினரால் காட்சிமுனை அமைக்கப்பட்டு, 'டெலஸ்கோப்'பில் இருந்து ஊட்டி நகரம், குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை ரசிக்கலாம். ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது.

குன்னூர் சிம்ஸ்பூங்கா: ஜே.டி.சிம் என்ற ஆங்கிலேயரால், 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ் பூங்காவில், 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. 27 வகையான கற்பூர மரங்கள், 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை, யுஜிநாய்டஸ் உட்பட பல வகையான பழமை வாய்ந்த மரங்கள் அலங்கரிக்கின்றன. படகு இல்லம், சிறுவர் பூங்காவின் இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பு, 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர் செடிகள் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சியாகும். குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில் சிம்ஸ்பூங்கா உள்ளது

கோத்தகிரி நேரு பூங்கா: கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் உள்ள நேரு பூங்காவில் பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன. கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் ஆகிய பகுதிகளில் இருந்து பூங்காவிற்கு நடந்தே செல்லலாம்.

கல்லட்டி நீர்வீழ்ச்சி: ஊட்டி-முதுமலை சாலையில் 13 கி.மீ., தொலைவில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டிய காலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனங்களில் காணப்படும் அரிய வகை பூக்களும் பூத்திருப்பதை பார்க்க கிடைப்பது பயணிகளுக்கு வரப்பிரசாதம்தான்.

லேம்ஸ்ராக்: சிம்ஸ் பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளது. காட்சி முனையில் இருந்து பல ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளதாக்கு காட்சிகளை காண்பதும்; பள்ளதாக்கில் கொட்டி கிடக்கும் இயற்கை காட்சிகள் மனதுக்கு இதம் தரும்.

டால்பின்ஸ் நோஸ்: லேம்ஸ்ராக்கில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள டால்பின்ஸ் நோஸ் காட்சி முனையில் டெலஸ்கோப் உள்ளது. பள்ளத்தாக்கு காட்சி முனையில் இருந்து 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி, மேட்டுப்பாளையம் பகுதி ஆகியவற்றை இங்கிருந்து ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்காட்சி முனைக்கு செல்லும் போதே அதன் குளிர்ச்சியின் குதூகலம் பயணிகளை வரவேற்கும்.

கேத்ரீன் நீர்வீழ்ச்சி: பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகள், பாறைகள் வழியாக வரும் கேத்ரீன் நீர்வீழ்ச்சி, காட்சி கோபுரம் கோத்தகிரி அரவேணு பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. பாசி படிந்த பாறைகள், அழகான நீர்வீழ்ச்சி 'போட்டோ' எடுக்க சிறந்த இடம்.

கோடநாடு காட்சிமுனை: கோடநாடு காட்சிமுனையில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வனங்கள் மட்டுமே காட்சி கோபுரத்தில் உள்ள 'பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜ்ஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை காண்பது இதன் சிறப்பம்சம். தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் இங்கிருந்தே ரசிக்கலாம். நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் 'மாயாறு' ஆறு வரையுள்ள அழகிய வயல்வெளிகள், அடர்ந்த வனங்கள், யானைகளின் வழித்தடங்கள், ரங்கசாமி கோவில் மலை உட்பட மலை முகடுகள் அனைத்தையும் இங்கிருந்தே பார்க்கலாம்.

பைக்காரா படகு இல்லம்: பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது இங்குள்ள அருவி ரம்மியத்தை ஏற்படுத்தும். நீர்வீழ்ச்சியை அடுத்து ஒரு கி.மீ., தொலைவில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்ட படகு இல்லம் கண்கொள்ளா காட்சியாகவும், சவாரி செய்யவும் விரும்புகின்றனர். இங்கு புதிதாக விடப்பட்டுள்ள 'அட்வென்சர்' படகு இளைய பட்டாளங்களின் வேகத்துக்கு சவால் விடும். பைக்காரா செல்லும் வழியில் பைன் பாரஸ்ட், ஸ்கூல் மந்து, ஷூட்டிங் பாய்ன்ட் சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்தபகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், குப்பை கொட்டினாலோ, இயற்கையை சேதப்படுத்தினாலோ அபராதம் தான். ஊட்டியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம்: கூடலூர் ஒட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், மான், யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உட்பட விலங்கினங்கள், மயில் உட்பட பறவையினங்கள் வசிக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர், ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இவர்கள், வனத்துறை வாகனங்கள் மூலமும், யானைகள் மூலமும் சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தற்போது கோடையில் வனத்தீ ஏற்பட்டு வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. வனத்துறையினர் தேதி அறிவிக்கும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் உள்ளது.

ஊசிமலை: ஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ளது ஊசிமலை காட்சி கோபுரம். இங்கிருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.

ரோஜா மலரே ராஜகுமாரி...: ஊட்டி தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடும் வகையில், 1996ம் ஆண்டில் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஊட்டி விஜயநகரப் பகுதி ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டு, 'நூற்றாண்டு ரோஜா பூங்கா' உருவாக்கப்பட்டது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 5 எக்டேர் பரப்பில் 6 தளங்களில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 ரக ரோஜாக்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து வருகின்றன. 2006ம் ஆண்டு ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில் 'கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்' விருது சர்வதேச ரோஜா சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது நீலகிரிக்கே பெருமையை சேர்த்துள்ளது. ஆசியாவில் அதிகபட்ச ரோஜா ரகங்களை கொண்ட பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.

'இலவசமா' ஒரு பூங்கா...! மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊட்டி - பர்ன்ஹில் சாலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தோட்டக்கலை துறையால் மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரம் உள்ள இப்பூங்காவில், அல்னஸ் நெப்லென்சிஸ், கேலிஸ்டோமன், கூப்ரசுஸ், மேக்ரோகார்பா உட்பட 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதில், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 'கிரிக்கெட்' பேட் தயாரிக்க பயன்படும் 'வில்லோ' மரமும் இங்குண்டு. பூங்காவை ஒட்டி சதுப்பு நிலம் உள்ளதால், மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட நீலகிரி வாழ் பறவை இனங்களின் 'இலவச இசை' அனைவரின் மனதுக்கும் இதமளிக்கும். அமைதியான சூழலில் 'புத்தகம்' படிக்க விரும்புபவர்கள் இங்கு வரலாம்.

சவாரிக்கு புதிய படகு இல்லம்...: ஊட்டி நகரின் மத்திய பகுதியில் தற்போதைய ரேஸ்கோர்ஸ் முதல் காந்தல் வரையுள்ள பகுதி முழுவதும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நீர்தேக்கமாக இருந்தது. 1823ம் ஆண்டு அப்போதைய கோவை கலெக்டர் ஜான் சலீவனால், படகு சவாரிக்கும், மீன் பிடிக்கவும் ஏரி உருவாக்கப்பட்டது. 2.75 கி.மீ., நீளமும், 100 முதல் 140 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. 1877ம் ஆண்டு வரை இந்த ஏரி நீர் குடிநீராக பயன்பட்டு வந்த நிலையில், ஊட்டி நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலந்ததால் குடிநீருக்கு பயனற்று போனது. தற்போது தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பராமரிப்பில், 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 100க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏரியின் மறு கரையில் உருவாக்கப்பட்ட புதிய படகு இல்லம் தற்போது புதிய பொலிவை பெற்றுள்ளது.

'தைய்ய, தைய்யா...' பயணத்தில் குஷி: பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப் பட்ட ஊட்டி மலை ரயில் குழந் தைகளின் மொழியில் டாய் டிரெயின் என அன்புடன் அழைக்கப்படுகிறது. ஊட்டியில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம். தற்போது, இதற்கான பயண சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால், பயணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் சற்று முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்து விட்டால், ஏமாற்றம் இருக்காது.  ஊட்டி முதல் குன்னூர் வரை மட்டுமே பயணம் இருந்தாலும் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடலாம்.

இந்தியச் சரணாலயங்கள்

  இந்தியச் சரணாலயங்கள்

இந்தியாவில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் வனவிலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வீரம் என்று மகிழ்ச்சி அடைவதும், அதன் இறைச்சியை உண்பதும், இறைச்சியை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்துவதுமாக பல நோக்கங்கள் இருக்கின்றன. இந்த நோக்கங்களால் அரியவகை பல வனவிலங்குகளும், பறவைகளும் இன்று இல்லாமல் போய்விட்டன. இனியும் இந்த நிலை நீடிக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இந்திய அரசும் மாநில அரசுகளும் 247 வனவிலங்கு சரணாலயங்கள், 55 தேசீயப் பூங்காக்களையும் உருவாக்கிப் பராமரித்து வருகின்றன. இவற்றில் முக்கியமான சில வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் குறித்த சிறு தகவல்கள்

பொருளடக்கம்

தமிழ்நாடு

தமிழகத்தில், உயிரினங்கள் பாதுகாப்புக்கு எட்டு சரணாலயங்கள்; 13 பறவை சரணாலயங்கள்; ஐந்து தேசிய பூங்காக்கள்; மூன்று புலிகள் சரணாலயங்கள்; நான்கு யானை சரணாலயங்கள்; மூன்று பல்லுயிர் பெருக்கத் தளங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

கிண்டி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் கிண்டி தேசீயப் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் மொத்தப்பரப்பளவு 2.7 சதுர கிலோ மீட்டர்தான். இங்கு பலவகை மான்கள் இருக்கின்றன. இதனருகில் பாம்புப் பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்குறுங்குடி மலைப்பகுதி தொடங்கி அம்பாசமுத்திரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் முண்டந்துறை மலைப்பகுதி வரையிலான வனப்பகுதி களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயமாகும். இது புலிகளுக்கான சரணாலயம் என்றாலும் இம்மலைப் பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்கு, யானை, உடும்பு, கரடி, பலவகைபாம்புகளும் அதிகம் வாழ்கின்றன.

ஆனைமலை

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆனைமலை வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 958 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கடம்பை மான், புள்ளி மான், காட்டுப்பன்றி, கரடி என்று நிறைய வன விலங்குகள் இருக்கின்றன.

முதுமலை

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முதுமலை வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 321 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கடம்பை மான், புள்ளி மான், குரைக்கும் மான், காட்டுப்பன்றிகள், காட்டுப் பூனை, புனுகுப்பூனை, பறக்கும் அணில், பாம்பு வகைகள், பறவை வகைகள் என்று நிறைய வன உயிரினங்கள் இருக்கின்றன.

வேடந்தாங்கல்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு ஊரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வேடந்தாங்கல் சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 0.3 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் நவம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பல வெளிநாட்டுப் பறவைகள் வந்து இங்குள்ள நீர்நிலைகளில் தங்கி இருக்கின்றன.

கோடிக்கரை

தமிழ்நாட்டில் கோடிக்கரை ஊரிலிருக்கும் வனப்பகுதியில் 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த சரணாலயம் இருக்கிறது. இங்கு வெளிநாட்டுப் பறவைகள் ஏராளமாக வந்து தங்கிச் செல்கின்றன.

ஆந்திரா

ஆந்திராவில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

நாகார்ஜீனசாகர் - ஸ்ரீசைலம்

ஆந்திராவின் குண்டூர், கர்நூல், நல்கொண்டா மற்றும் மகபூப் நகர் என்று ஐந்து மாவட்டங்களில் இருக்கும் மிகப்பெரிய நாகார்ஜீனசாகர் வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 3568 சதுர கிலோமீட்டராகும். இதில் நாகார்ஜீன சாகர் புலிகள் திட்டத்திற்கு மட்டும் 2800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கிறது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, பலவகையான மான், நரி, ஓநாய் மற்றும் முதலை போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

கொல்லேரு

ஆந்திராவின் விஜயவாடா நகருக்கு அருகில் இருக்கும் கொல்லேரு சரணாலயம் ஏரியுடன் 673 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையதாகும். இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலத்தில் நாரை, வண்ணக் கொக்கு மற்றும் நீர்நிலைப் பறவைகள் சில வந்து இனப்பெருக்கம் செய்து திரும்புகின்றன.

கர்நாடகா

கர்நாடகாவில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

பந்திப்பூர்

கர்நாடகாவில் மைசூரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனவிலங்குகளுக்கான இந்த தேசீயப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 874 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, பலவகையான மான், நரி, ஓநாய், காட்டு நாய், மலபார் அணில், பச்சைப் புறா, காடை, கவுதாரி மற்றும் முதலை போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

நகர்ஹோலே

கர்நாடகாவில் மைசூரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனவிலங்குகளுக்கான இந்த குடகுமலைத் தேசீயப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 571 சதுர கிலோமீட்டர். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, காடை, கவுதாரி மற்றும் காட்டுக்கோழி போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பன்னார்கட்டா

கர்நாடகாவில் பெங்களூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த வனப்பகுதியின் பன்னார்கட்டா தேசியப்பூங்காவில் பலவகையான மான்கள் இருக்கின்றன.

ரங்கன் திட்டு

கர்நாடகாவில் ஸ்ரீரங்கப்பட்டினம் ஊருக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ரங்கன் திட்டு சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் ஜீலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையுள்ள காலத்தில் திறந்த வாய் நாரை, கரண்டி மூக்கன் மற்றும் வெள்ளை இபிஸ் போன்ற நீர்நிலைப் பறவைகள் சில வந்து செல்கின்றன.

கேரளா

கேரளாவில் இருக்கும் முக்கியமான சரணாலயம் பெரியாறு சரணாலயம்தான்.

பெரியாறு

கேரளாவில் இருக்கும் கோட்டயம் எனும் ஊரிலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவிலும் தமிழ்நாட்டில் இருக்கும் தேனி எனும் ஊரிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் பெரியாறு சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை, பலவகையான மான், காட்டு நாய், புலி, பலவகைக் குரங்கு, பறக்கும் அணில்கள், மலை அணில், காட்டுக் கோழி, காட்டு மைனா போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

காசிரங்கா

அஸ்ஸாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 217 கிலோமீட்டர் தொலைவிலும், ஜோர்கட் எனும் ஊரிலிருந்து 84 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் காசிரங்கா சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 430 சதுர கிலோமீட்டர். இது காண்டா மிருகத்திற்கான சிறப்பு சரணாலயமாகும். இங்கு காண்டாமிருகம், யானை, சதுப்பு நில மான், சிறுத்தை, பூனை, மலைப்ப்பாம்பு, சிகப்புக் காட்டுக் கோழி, வாத்து, மானிடர் பல்லி போன்றவை அதிகமாக இருக்கின்றன.

மானஸ்

அஸ்ஸாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூட்டான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மானஸ் நதியுள்ள 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சரணாலயம் இது. இந்த சரணாலயத்தில் புலி, பலவகையான பறவைகள் பல இருக்கின்றன.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

ஜல்டபாரா

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் ஹாசிமாரா அருகில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 116 சதுர கிலோமீட்டர். இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, காட்டு எருமை, குரைக்கும் மான், முள்ளம்பன்றி மற்றும் பலவகையான பறவை போன்றவை அதிகமாக இருக்கின்றன.

[தொகு] சுந்தரவனம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்கத்தாவிற்குத் தெற்கே 112 கிலோமீட்டர் தொலைவிலும் போட்கானிங் எனும் ஊரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் சுந்தரவனம் இருக்கிறது. இந்த சுந்தரவனத்தின் வடக்குப் பகுதியை சஜ்ரகலி சரணாலயம் என்றும் தெற்குப் பகுதியை லோதெய்ன் தீவு சரணாலயம் என்றும் சொல்கின்றனர். இதன் மொத்தப் பரப்பளவு 2585 சதுர கிலோமீட்டர். இங்கு ராயல் பெங்கால் டைகர்ஸ் எனும் சிறப்பு புலி, மான், காட்டுப்பன்றி, பலவிதமான முதலை மற்றும் ஆமை இருக்கின்றன.

பீகார்

பீகார் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ஹஜாரிபாக்

பீகார் மாநிலத்தில் ராஞ்சி எனும் ஊரிலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும் கோடர்மா எனும் ஊரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த மலைப்பிரதேச சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 186 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, மயில், நீலப்பசு போன்றவை நிறைய இருக்கின்றன.

பலாமாவு

பீகார் மாநிலத்தில் ராஞ்சி எனும் ஊரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் சிப்பாதோஹர் எனும் ஊரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 979 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுஎருமை, குரைக்கும் மான் மற்றும் பலவகையான மான் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ராதாநகரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் கோல்ஹாபூர் அருகில் இருக்கும் ராதாநகரி சரணாலாயத்தின் மொத்தப்பரப்பளவு 2072 சதுர கிலோமீட்டர். இது காட்டு எருமைகளுக்கான சரணாலயமாகும். இங்கு காட்டு எருமை, சிறுத்தை, காட்டுப் பன்றி, பல வகை மான்கள் அதிகம் இருக்கின்றன.

பொரிவ்லி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பை அருகில் 34 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொரிவ்லி ஊரில் உள்ள விலங்கியல் தேசீயப் பூங்காவான இதன் மொத்தப் பரப்பளவு 100 சதுர கிலோமீட்டர். இங்கு சிறுத்தை, காட்டுப் பன்றி மற்றும் பறவைகள் இருக்கின்றன.

டடோபா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சந்திராபூர் எனும் ஊரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் தெற்கிலும் வரோரா எனும் ஊரில் இருந்து 56 கிலோமீட்டர் தென்மேற்கிலும் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 117 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டு எருமை, கடம்பை மான், காட்டு மாடு, காட்டுப் பன்றி, முதலை ஆகியவை இங்கு இருக்கின்றன.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

கிர்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள கிர் காடுகளில் சிங்கங்களுக்கான சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் சிங்கத்திற்கான ஆசிய அளவில் சிறப்பு பெற்ற சரணாலயமாகும். சாசன்கிர் எனும் ஊரிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 1412 சதுர கிலோமீட்டர். இங்கு சிங்கம், சிறுத்தை, காட்டுப் பன்றி, கடம்பை மான், மலைப்பாம்பு, கழுகு மற்றும் கருடன் போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பிரோடன்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் எனும் ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கடல் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 271 சதுர கிலோமீட்டர். இங்கு பருவகாலமாக நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கிறது. இங்கு ஆக்டோபஸ், பவளப் பூச்சி, பப்பர் மீன், கொக்கு, நாரை போன்றவை இருக்கிறது.

சுரேந்திர நகர்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாரங்கத்ரா எனும் ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுரேந்திர நகர் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 3569 சதுர கிலோமீட்டர். இது காட்டுக்கழுதைகளுக்கான சரணாலயம் ஆகும். இந்தக் காட்டுக் கழுதைகள் அரேபியா, துருக்கி, திபெத், மங்கோலியா, ரசியா போன்ற நாடுகளில் மட்டும்தான் இருக்கின்றன. இங்கு காட்டுக் கழுதை தவிர காட்டு மாடு, ஒநாய், கடம்பை மான் போன்றவைகளும் இருக்கின்றன.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

கன்ஹா

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சிரிடோங்கிரி எனும் ஊரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயம் மண்ட்லா மற்றும் பாலாகாட் எனும் இரண்டு மாவட்டங்களில் மொத்தப் பரப்பளவில் 1940 சதுர கிலோமீட்டர் உள்ளது.இங்கு புலி, மான், காட்டுப் பன்றி, காட்டு எருமை, சிறுத்தை, குரைக்கும் மான், சுண்டெலி மான், முள்ளம்பன்றி, காட்டு மாடு போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பந்தவ்கர்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உமாரியா எனும் ஊரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 105 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, வெள்ளைப் புலி போன்றவை இருக்கின்றன.

சிவ்புரி

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஜான்சி எனும் ஊரில் இருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவ்புரி சரணாலயத்தில் கடம்பை மான் மற்றும் காட்டு மாடு போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ரண்தம்போர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சவாய் மதாபூர் எனும் ஊரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 392 சதுர கிலோமீட்டர் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, கழுதைப்புலி, ஓநாய், காட்டுப் பூனை, புனுகு பூனை, காடை, கவுதாரி, பச்சைப்புறா, சிவப்புக் காட்டுக் கோழி போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பரத்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆலிவர் எனும் ஊரில் தெற்கில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர். இங்கு 350 க்கும் அதிகமான பறவை வகைகள் இருக்கின்றன.

சாரிஸ்கா

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆலிவர் எனும் ஊரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாரிஸ்கா சரணாலயத்திலன் மொத்தப் பரப்பளவு 197 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை மற்றும் பலவகையான மான்கள் , முதலை போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ஜெய்சல்மேர் பார்மர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்சல்மேர் நகரைச் சுற்றி அமைந்துள்ள இந்தப் பாலைவனச் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 3000 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தப் பாலைவனப் பகுதியில் அதிகமாக வளர்ந்துள்ள புதர்ச்செடிப் பகுதிகளில் சில வகை மான்கள், ஓநாய், பாலைவன பூனை, நரி போன்றவைகளுடன் பஸ்டர்டு எனும் அரியவகைப் பறவையும் இங்கு காணப்படுகின்றன.

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

[தொகு] கார்பெட்

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ராம் நகர் எனும் ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயம்தான் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் சரணாலயம். இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 525 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு புலி, குரைக்கும் மான், புள்ளி மான், கடம்பை மான், காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, சிறுத்தை, முள் எலி, மலைப்பாம்பு, கரடி, காடை, கவுதாரி காட்டு மாடு போன்றவைகள் நிறைய இருக்கின்றன.
இங்கு 110 வகையான மரங்கள், 51 வகையான புதர்ச்செடிகள், 33 வகையான மூங்கில்கள் இருக்கின்றன.

தூத்வா

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் தூத்வா எனும் ஊரில் இருக்கும் இந்த சரணாலயம் நேபாள நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 492 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, நீலப்பசு, மீன் பூனை, சிறுத்தைப் பூனை, கொம்பு ஆந்தை, கழுகு ஆந்தை, காடை, கவுதாரி, கொக்கு மற்றும் நாரை போன்றவைகள் இருக்கின்றன.

நந்ததேவி

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இமயமலைப் பனிப் பிரதேசப் பகுதியில் இருக்கும் இந்த சரணாலயத்தில் மொத்தப் பரப்பளவு 630 சதுர கிலோமீட்டர். இங்கு ஹிமாலயப் பிரௌன் கரடி, ஹிமாலய கறுப்புக் கரடி, பனிச் சிறுத்தை, கஸ்தூரி மான் மற்றும் பனிப்புழு போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ஒரிசா

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

சிம்லிபால்

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பாரிபாடா எனும் ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 303 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு சுண்டெலி மான், புலி, சிறுத்தை, யானை, காட்டு எருமை, பறக்கும் அணில் ஆகியவை அதிகம் இருக்கின்றன.

சில்கா

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பால்கான் எனும் ஊரில் இருக்கும் இந்தப் பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 900 சதுர கிலோமீட்டர். இங்குள்ள ஏரியில் பலவகையான கொக்கு, நாரை, போன்ற நீர்நிலைப் பறவைகள் மற்றும் மான்கள் போன்றவைகள் இருக்கின்றன.

சட்கோஜியா கார்ஜ்

ஒரிசா மாநிலத்தில் தென்கனால், பூரி, கட்டாக் மற்றும் பூல்பனி எனும் நான்கு மாவட்டங்களில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டு எருமை, காட்டுப் பன்றி, குரங்கு மற்றும் காடை, கவுதாரி, பறக்கும் அணில் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

மணலி

இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் குலூ எனும் ஊரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மணலி சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு செப்டம்பர், அக்டோபர் மற்றும் மே, ஜீன் ஆகிய மாதங்கள் பருவகாலமாக இருக்கிறது. இங்கு தார், சேரோ, கோரல், கலிஜ், கோக்லாஸ், சக்கோர் மார்டன் எனும் இமாசலப் பிரதேசத்தில் மட்டும் இருக்கும் அபூர்வ விலங்குகள், புனுகுப் பூனை, பறக்கும் நரி ஆகியவை இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

டச்சிகாம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் எனும் ஊரில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 142 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு ஏப்ரல் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரையிலான எட்டு மாதங்கள் பருவகாலமாக இருக்கிறது. இங்கு மான், ஹிமாலயக் கரடி, பனிச்சிறுத்தை, காட்டு ஆடு, பனிப்பிரதேச மயில், இபெக்ஸ், கஸ்தூரி மான் ஆகியவை இருக்கின்றன.