ஊட்டி: "அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும்' என, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது. மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடு குறித்து பேசினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நுகர்வோர் அமைப்புகள் தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும். பல நிலைகளில், தனக்கு என்ற செயல்பாட்டை தவிர்த்து மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மையங்கள், மன்றங்கள், மக்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி வைக்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை மக்கள் அறிய உதவ வேண்டும். மக்களின் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மக்களுக்கு உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். குறைகளுக்கு புகார் அனுப்புவதோடு இருந்து விடாமல், தொடர் கண்காணிக்க வேண்டும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தயார்படுத்த வேண்டும்; மக்கள், தட்டிக் கேட்பவர்களாக மாற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் பேசுகையில், "மக்கள் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கொண்டுள்ளனர்; அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும். மக்களை விழிப்படைய செய்வதுடன், அடிப்படை தேவைகள் பெற உதவ வேண்டும். ரேஷன் கார்டு பெற்றுத் தருதல், முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருதல் உட்பட அரசு நலத்திட்டங்களை பெற உதவுவது அல்லது அவைகளை பெற வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளும் நலத்திட்டங்கள், செயல்பாடுகளில் நிலவும் குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; முறைகேடுகளை களைய மேலதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை சேகரித்து, விவாதிக்க வேண்டும். உள்ளூர் குறைபாடுகளை மக்கள் மூலமாக தீர்க்க வலியுறுத்த வேண்டும்.நீர் வளம், சுகாதார சீர்கேடு, கழிவு நீர் அகற்றுதல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களில், உள்ளாட்சி செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். புகார் அளிக்கும் முன், ஆதாரங்களை திரட்ட வேண்டும். மக்கள் நலனுக்கு செயல்படும் அமைப்பாக உருவாக வேண்டும். இவ்வாறு, வீரபாண்டியன் பேசினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்து, அமைப்புகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ், ரமேஷ், ஜெயச்சந்திரன், சுப்ரமணி, மஞ்சுளா, ராமச்சந்திரன், டேவிட், கவிதா, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். கிராம நுகர்வோர் மன்ற அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.